நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வஉசி அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 2021- 22ஆம் ஆண்டில் படித்து முடித்த 43 ஆயிரத்து 861 பேர் பட்டம் பெற்றனர். 984 ஆய்வு மாணவர்கள் மற்றும் பதக்கம் பெற்ற 105 மாணவர்களும் நேரடியாக ஆளுநரிடம் பட்டங்களை பெற்றனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் தெப்ராய் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ”இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்திய நாடு பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு முன்பே நாளந்தா,தட்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைகழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்த போது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1943இல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள். உலக சுற்றுலாத் தளத்தில் இந்திய சுற்றுலா துறையால் ’அதிதி தேவோ பவ’ என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும் இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவபிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய், தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருத வேண்டும் என சொல்கிறது. மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.
பட்டம் பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப் போகீறீர்கள்.40 வயதில் உலகை முழுதும் தெரிந்து கொண்டு உங்களால் சாதனை படைக்க முடியும். மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்ல முடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெற முடியும்.
2047 உலகின் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும். இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளி மிகுந்த காலமாக அமைய உள்ளது. தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது.
2047இல் இந்திய உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும். இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம் பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி - சபாநாயகர் அப்பாவு தகவல்