திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினரின் மன உறுதியையும், உடல் பலத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறுகட்ட பயிற்சிகள் மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நெல்லை மாவட்ட காவலர்களுக்கு யோகா பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட மாநகர பகுதியில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கிவைத்தார். பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பெண் காவலர்கள் உள்பட 115 ஆயுதப்படை காவலர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவலர்களுக்கு மன உறுதியையும், உடல் உறுதியையும் அதிகரிக்க தொடர்ந்து இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
அப்போது நாங்குநேரியில் இரண்டு பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் நிலவரம் குறித்து கேட்டபோது, "இந்த வழக்கில் இதுவரை ஐந்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நான்கு குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "ஆதிதிராவிடர் என்பதால் தரையில் உட்கார வைக்கிறார்கள்" - ஊராட்சித் தலைவரின் கணவர் பேட்டி