திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று ( ஏப்.15 ) ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. எனவே முன்னெச்சரிக்கையாக துணை ஆணையர் தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுவாதிகாவுக்கு இன்று ரயில் நிலைய பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ரயில் நிலையத்தின் முதலாவது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே இரண்டாவது நடைமேடையில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையுடன் கடும் வெயிலில் பெரும் சிரமத்தோடு நடந்து வந்தார். கையில் பெரிய அளவில் லக்கேஜ் பேக் இருந்ததால் அந்த பெண் தனது குழந்தையை மடியில் தூக்கி வைக்க முடியாமல் தரையில் நடக்க வைத்து அழைத்துச் சென்றார்.
அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது. ஆனால், வயிற்றில் மற்றொரு குழந்தை கையில் லக்கேஜ் பேக் என ஏற்கனவே சுமையோடு வந்த அந்த பெண்ணால் குழந்தையை தூக்க முடியவில்லை. இதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை. அதேசமயம் பெண் காவலர்கள் கூட்டத்தில் இருந்த உதவி ஆய்வாளர் சுவாதிகா, கர்ப்பினியின் நிலையை உணர்ந்து, ஓடி சென்று அவருக்கு உதவினார்.
அதன்படி அந்த பெண்ணின் குழந்தையை தூக்கி தோளில் சுமந்தார். பின்னர், சுமார் 300 மீட்டர் தூரம் சுவாதிகா குழந்தையை தோளில் தூக்கி சுமத்தபடி முதலாவது நடை மேடைக்கு வந்தார். அதற்குள் அந்த கர்ப்பிணியின் உறவுக்கார பெண் ஒருவர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். உதவி ஆய்வாளர் சுவாதிகா குழந்தையை தூக்கிச் சென்றதைப் பார்த்ததும் அந்த உறவுக்கார பெண், அவரிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், சாதாரணமான மக்களே வெயிலில் நடக்க முடியாத சூழல் இருக்கும்போது கர்ப்பிணி ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் மூச்சு வாங்க நடந்து சென்றபோது அதை பார்த்து மனம் இறங்கிய பெண் காவல் ஆய்வாளர் ஓடி சென்று அவருக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
உதவி ஆய்வாளர் சுவாதிகா திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார் ஆறு மாதமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பயிற்சி முடித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவர் நெல்லலை சந்திப்பு காவல் நிலையத்திற்கு உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சங்கூதுவதில் சாதனை படைத்த சாதுக்கள்..! ஒரே நேரத்தில் ஆயிரத்தெட்டு பேர்..