திருநெல்வேலி மாவட்டம் மானூர் அழகியபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (49). இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடையில் விற்பனையான தொகையை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
ரவியின் பக்கத்து வீட்டுக்காரரான லட்சுமணன் (35), தெற்கு வாகைக்குளம் சாலையில் நிற்பதைக் கண்டு விசாரித்துள்ளார். அதற்கு லட்சுமணன், தனது இருசக்கர வாகனம் பழுதாகி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். நன்கு தெரிந்தவர் என்பதால் அவருக்கு உதவி செய்துவிட்டு ரவி வங்கிக்குச் சென்றுள்ளார்.
வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக வாகனத்தின் பெட்டியைத் திறந்து பார்த்தபோது பணத்தைக் காணவில்லை. இதைக் கண்டு அதிர்ந்த ரவி, உடனடியாக மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராமர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் லட்சுமணனிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவிக்கவே காவல் துறையினருக்குச் சந்தேகம் வலுத்தது. மேற்கொண்டு கடுமையாக நடத்திய விசாரணையில், லட்சுமணன் உண்மையைத் தெரிவித்துள்ளார்.
வாகனம் பழுதாகி நிற்பதுபோல் நடித்து அந்தப் பணத்தைத் திருடியதை லட்சுமணன் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, லட்சுமணன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும் லட்சுமணன் திருடிய ஐந்து லட்சத்து 14 ஆயிரத்து 620 ரூபாயை பறிமுதல்செய்தனர்.
![Rs 5 lakh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-04-cashtheft-accusesarreat-scrpt-7205101_09022021203803_0902f_1612883283_93.jpg)
இவ்வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக்கொடுத்த மானூர் காவல் துறையினரை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன், ஊரக உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ச்சனா ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க:சர்வதேச கடத்தல் மன்னன் பெங்களூருவில் கைது!