திருநெல்வேலி: வி.எம். சத்திரம், ஜான்சி ராணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வணிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு (ஜன.25) ராமசாமி அவரது மகள், மகன் மூவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர், வீட்டில் இருந்தவர்களை துணிகளைக் கொண்டு கட்டி போட்டுவிட்டு 50 சவரன் நகை, செல்போன், பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சிறிது நேரத்தில் வேலைமுடிந்து வீட்டிற்கு வணிதா வந்துள்ளாா். வணிதா வரும் சப்தம் கேட்டு கொளளையர்கள் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த வணிதா கணவர் மற்றும் பிள்ளைகளின் கட்டுகளை அவிழ்த்து விட்டு, உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன் மற்றும் சரவணக்குமாா் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், கொள்ளை கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கி சென்றதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இது குறித்து தூத்துக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தென்பாகம் காவல் ஆய்வாளர் கங்கை நாத பாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு கொள்ளையர்கள் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து, காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். காவல் துறையினரின் வருகையை அறிந்த இரண்டு கொள்ளையர்களும் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால், கொள்ளை கும்பலை காவல் துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து, கண்ணன், சில்வர் ஸ்டார், கிஷோர், சம்சுதீன் என்பது தெரியவந்தது.
இதில் படுகாயமடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். தப்பி ஓட முயன்ற கண்ணன், சில்வர் ஸ்டார் , கிஷோர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய சம்சுதீனை மட்டும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 சவரன் நகைகள், செல்போன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர்பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வருவாயை விட 750% அதிகம் சொத்து சேர்த்த ஓய்வு பெற்ற காவலர் மீது வழக்கு!