திருநெல்வேலி மாவட்டத்தில் தனிநபர் கடன் குறித்து இணையதளங்களில் பல்வேறு போலி நிறுவனங்கள் மோசடி செய்துவருவதாக மாநகர காவல் துறைக்கு புகார் வந்துள்ளது. அதாவது கரோனா காலத்தில் தங்களுக்கு தனிநபர் சிறப்பு கடன் தருவதாகவும் அதற்காக கட்டணம் செலுத்தக் கோரியும் நிறுவனங்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த தனிநபர் மோசடி குறித்து கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து, அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில நாள்களாக தனியார் நிறுவனத்தின் பெயரில் சில கரோனா கால சிறப்பு கடனாக சில லட்சங்கள் தருவதாகக் கூறி பொதுமக்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி இந்த கடனை தருவதற்கு ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் மற்றும் பிராஸ்சஸிங் கட்டணம் என பல ஆயிரம் ரூபாய் பணம் கறக்கும் மோசடி அரங்கேறத் தொடங்கியுள்ளது.
அவ்வாறு கட்டக் கூடிய வங்கி வெளி மாநிலங்களில் உள்ளபோதும் பலரும் கடன் கிடைக்கிறது என்ற ஆசையில் அவசரப்பட்டு பல ஆயிரம் ரூபாயை கட்டி விடுகின்றனர். எனவே மக்கள் இந்த விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.