திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிவன் கோயில் அருகில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி இருக்கும் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சுமார் 35 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடுகளை காலி செய்யும்படி மாநகராட்சி சார்பில் ஆறு மாதத்துக்கு முன்பு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை யாரும் வீட்டை காலி செய்யாததால் மாநகராட்சியினர் அனைத்து வீடுகளையும் நாளை (செப்டம்பர் 12) இடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனிடையே, பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் தங்களை திடீரென வெளியேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் பொதுமக்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 11) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது ஆட்சியர் அலுவலகம் முன்பு விறகு, சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், அரிசி ஆகியவற்றை கொண்டுவந்து சமையல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை சமையல் செய்ய விடாமல் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதற்கிடையில் நாளை காலை அனைத்து வீடுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் இடிக்க உள்ளதால், பொதுமக்களின் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:வசந்தகுமாரின் வாழ்க்கையை படிப்பதன் மூலம் இளைஞர்கள் உயர்வை அடைய முடியும்' - ஸ்டாலின்