திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இணையதள கோளாறு, மற்றும் இணையத்தின் வேகம் குறைபாடு காரணமாக தேர்வுகள் நடத்துவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதி ஹாமிம்புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இணையதளம் வாயிலாக நடத்தப்படுகிறது. அதே வேளையில், ஒரு ஆசிரியருக்கு ஒன்று இரண்டு செல்போன்களை கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு இணையதளம் கோளாறு, இணையத்தின் வேகம் குறைபாடு காரணமாக ஒரு தேர்வை மூன்று நாள்கள் எழுதும் அவல நிலை உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மாணவர்களின் எழுத்து திறனை பாதிக்கும் என்று கூறியுள்ள பெற்றோர், உடனடியாக இணையதளம் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இணையதள தேர்வுகளை கைவிட்டு மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய பெற்றோர், நன்கு கற்றறிந்த மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக தேர்வுகள் நடத்துவதை விட எழுத்து தேர்வாக நடத்த வேண்டும் என்றனர்.
மேலும் இணையதளம் வாயிலாக தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் உடல் நலன், மற்றும் பார்வை திறன் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் காவல்துறையினர், பள்ளி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: செப்.24 முதல் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்!