நெல்லையை அடுத்து அருகன்குளத்தில் எட்டெழுத்து பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று மண்பானைகளில் விதவிதமான பதார்த்தங்கள் படைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டுவருகின்றது.
இதற்காக மண்பானைகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகின்றது. கிருஷ்ணரின் ஒவ்வொரு வேடங்கள், விநாயகர் பெருமாள் என அனைத்து தெய்வங்களின் ஓவியங்களையும் பல வண்ணங்களில் பானைகளில் வரைந்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுராவுக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பானைகள் அனைத்திலும் பலகாரங்கள் நிரப்பப்பட்டு அவை அனைத்தும் பூஜைக்கு வைக்கப்படுகிறது.
பின்னர் மறுநாள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு இந்தப் பிரசாதங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பூஜை செய்யப்பட்ட பானையை அவரவர் வீட்டில் உள்ள பூஜை அறையில் வைக்கும் பொது சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தீங்கு விளைவிக்கக்கூடிய நெகிழிப் பைக்குப் பதிலாக பிராசாதத்தை பானைகளில் வழங்குகிறார்கள்.