தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகள், மருந்தகங்கள் மட்டுமே குறிப்பிட்ட கால அளவு நிர்னையத்துடன் இயங்கி வருகிறது. வேளாண் பொருட்களை கொண்டு செல்லவும், வேளாண் தொடர்பான பணிகள் மேற்கொள்வதில் எந்தவித தடையும் இல்லை என அரசு விதிவிலக்கு அளித்திருந்தது.
இந்நிலையில், நெல்லை கங்கைகொண்டான் சுற்றுவட்டாரப் பகுதியில் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், நல்ல விளைச்சல் காணப்பட்டு அறுவடை பணிகள் முடிந்து கொள்முதலுக்கு தயாராகின. தற்போது ஊரடங்கு காரணமாக கொள்முதல் நிலையங்கள் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை, பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகின்றன.
இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றப்படாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மீதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் மீண்டும் எடுத்து வெயிலில் உலர வைத்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழையால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை