திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பொதுமுடக்க காலத்தில் முருகன் சிறப்பாக பணிபுரிந்ததாக அலுவலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
இதனிடையே உயிரிழந்த முருகனின் சொந்த ஊரான தச்சநல்லூர் அடுத்த கரையிருப்பு பகுதியில் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால் நெல்லை - மதுரை நெடுஞ்சாலை ஊர் விலக்கில் புறக்காவல் நிலையம் அமைக்க முருகன் விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகனின் நினைவாக அவரது மனைவி சாந்தி மற்றும் மூன்று மகள்களும் சேர்ந்து அங்கு புறக்காவல் நிலையம் ஒன்றை தங்கள் சொந்த செலவில் அமைத்துள்ளனர். கூடுதலாக அப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த புறக்காவல் நிலையத்திற்குள் நூலக வசதியும் ஏற்படுத்தியுள்ளனர். இதன் திறப்பு விழா இன்று (டிச.12) நடந்தது.
இதில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன் மற்றும் நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆணையர் தீபக் தாமோர் ரிப்பன் வெட்டி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் துணை ஆணையர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "உயிரிழந்த உதவி ஆய்வாளர் முருகனின் நினைவாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நூலகமும் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக இந்த நூலகம் மிகவும் பயன்படும். கரோனாவால் பல காவல் அலுவலர்கள் உயிரிழந்த நிலையில், உதவி ஆய்வாளர் நினைவாக இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது" என்றார்.
இதையும் படிங்க: சாதிக்க வயது தடை இல்லை என்பதற்கு அல்கா ஒரு முன் உதாரணம்!