திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த பொன்னுத்தாயி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"தனக்குச் சொந்தமான வீட்டில் உறவினர் பொன்ரூபி மெர்சி என்பவர் குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை என்னிடம் ஒப்படைக்கக் கோரி நாங்குநேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன் ரூபி மெர்சி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அந்த உத்தரவை உறுதி செய்தது. மேலும், வீட்டை ஓராண்டுக்குள் காலி செய்வதாக மெர்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ஆனாலும் இதுவரை வீட்டை காலி செய்யாத பொன்ரூபி மெர்சி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது பொன் ரூபி மெர்சி ஓராண்டுக்குள் வீட்டை காலி செய்வேன் என்ற உத்தரவாதத்தில் தான் கையெழுத்திடவில்லை என்று கூறினார். ஆனால், மற்றொரு விசாரணையின்போது, வீட்டை ஒப்படைப்பது தொடர்பான உத்தரவில் நான் கையெழுத்திட்டேன். ஆனால் அதில் என்ன கூறியிருக்கிறது என்ற முழு விவரம் தெரியாது என்று முன்னுக்கு பின் முரணாகவே தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ் சுந்தர், "எதிர்மனுதாரர் பொன்ரூபி மெர்சி, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காமல் அவமதித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறி வருகிறார். இவரைப் போன்றவர்களின் செயலால் வழக்கு தொடர்பவர்களுக்கு உரிய நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே மனுதாரருக்கு உரிய நீதி வழங்கும் வகையிலும், இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக்கூடாது என்பதாலும் பொன்ரூபி மெர்சிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதில் எதிர் மனுதாரரின் நீதிமன்ற அவமதிப்பு செயலுக்கு கருணை மற்றும் இரக்கம் பார்த்தால் மனுதாரருக்கு உரிய நீதி கிடைக்காது. மேலும் மனுதாரருக்குச் சொந்தமான வீடு ஒப்படைக்கப்பட்டதை 2 மாதத்திற்குள் கீழமை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.