திருவண்ணாமலை அடுத்த போளூர் அருகே உள்ள பத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரும் பெங்களூருவைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரும் சேர்ந்து போளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்ச ரூபாய் பணம் வசூலித்துள்ளனர்.
இதேபோல், 46 பேரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு நீண்ட நாள்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த இளைஞர்கள் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், அவரோ முறையான பதில் தெரிவிக்காமல் நீண்ட நாள்களுக்குப் பிறகு, பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். ஆனால், அது போலியான பணி நியமன ஆணை எனத் தெரியவந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிருப்தி அடைந்த அவர்கள், இன்று (மார்ச் 06) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் தாய், தந்தையை கொன்ற மகன்!