தென்காசி மாவட்டம் தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசியில் இன்று (நவ.22) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீா்செல்வம், அமைச்சா்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். அதன்படி தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி தனியார் மஹால் வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நெல்லையிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
விழாவையொட்டி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 3,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கிராமங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை!