தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் உள்ள 21 நிரந்தர உண்டியல்களும் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு, காணிக்கை கணக்கிடப்படுவது வழக்கம். இந்தாண்டு உண்டியல்கள் கணக்கெடுக்கும் பணி இன்றைய தினம் நாகர்கோவில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்னவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
உண்டியல்களில் காணிக்கையாக இருக்கும் பணம், தங்க நகைகளை பிரித்தெடுக்கும் பணி மற்றும் கணக்கெடுக்கும் பணிகளில் கோயில் ஊழியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், 17 லட்சத்து 71 ஆயிரத்து 256 ரூபாய் ரொக்கப் பணமும், 174 கிராம் எடை தங்க பொருள்களும், 256 கிராம் எடையுடைய வெள்ளி பொருள்களும் காணிக்கையாக இருந்துள்ளன.
கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக 10 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக 7 மாதங்கள் கோயிலுக்குப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாத நிலையில், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லைக் காணிக்கையாகக் கேட்கும் விநோத கடவுள்!