திருநெல்வேலி, என்.ஜி.ஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர்.
இந்நிலையில் அலுவலகத்தில் பணியாற்றும் கணக்கருக்கு கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வரும் 3ஆம் தேதி வரை அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து அலுவலகம் மூடி சீல் வைக்கப்பட்டது.
மேலும் அங்கு பணியாற்றும் 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் மீண்டும் சீராக அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் காரணமாக காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு