திருநெல்வேலி: திசையன் விளையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோருக்கு சொந்தமாக பொன்னாகுடி அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு கடந்த மே 14ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள லாரி ஓட்டுநர் ராஜேந்திரனனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த முன்னீர் பள்ளம் காவல் துறையினர், குவாரி உரிமதாரரான சங்கர நாராயணன் மற்றுல் மேலாளர் இருவரை கைது செய்தனர். இருப்பினும் குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் அவரது மகன் ஆகியோர் தலைமறைவானதால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர்.
இருவரையும் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று (மே 20) கர்நாடக மாநிலம் மங்களூரிலுள்ள விடுதியில் அவர்கள் தங்கியிருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் தமிழ்நாடு அழைத்து வந்த காவல் துறையினர் தொடர்ந்து வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி ராஜா சதுர்வேதி தலைமையிலான காவல் துறையினர் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு இருவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்த பிறகு குற்றவாளிகளை நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
இதையும் படிங்க:குவாரி விபத்து - பாறைகளை வெடி வைத்து தகர்க்கத் திட்டம்!