இந்திய விண்வெளி துறை மற்றும் அனுசக்தி துறை இணைந்து இந்திய விண்வெளி அறிவியலின் தந்தையாக போற்றப்படும் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனையொட்டி, நெல்லை தனியார் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட விண்வெளி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் இஸ்ரோ உந்தும வளாக மைய இயக்குநர் மூக்கையா தலைமையில் நடைபெற்றது. இதனை உந்தும வளாகத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.வி பெருமாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் விண்வெளியில் செலுத்தப்படும் ராக்கெட் உதிரிபாகங்கள், செயற்கைக்கோள் மாதிரிகள், விண்வெளி அறிவியலை விளக்கும் காட்சி படங்கள், சந்திரயான், மங்கல்யான் கோள்களின் ஒளிச்சித்திரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதனை இலவசமாக மாணவ மாணவிகள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ உந்தும வளாக மைய இயக்குநர் மூக்கையா, ‘விண்வெளி குறித்து மாணவர்கள் ஆராய்ந்து தெரிந்துகொள்ள இந்த எக்ஸ்போ உதவியாக இருக்கும். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு பின் 4ஆவதுதாக ரோவரை தரையிரக்கும் நாடாக இந்தியா உள்ளது. மின்னூட்டம் பெற்ற துகள்கள் இருந்தால் அதனுடைய எதிர்சக்திகளையும் மீறி ரோவரை இயக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு வருகின்றன’ என்றார்.