நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பொதகை நகரை சேர்ந்தவர் நாராயணன்(41). இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கரோனோ ஊரடங்கால் சமீபத்தில் தனது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நாராயணன் தனது மனைவி அனுஷ்யா(37), சகோதரர் ரவி(40) மற்றும் மகன் ஹரிகணேஷ்(12), ராம் சங்கர்(10) ஆகியோருடன் பொட்டல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
திடீரென அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கி குடும்பத்தினர் அனைவரும் நீரில் மூழ்கினர். அப்போது தான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதும் கூட, நாராயணன் தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றி கரையில் தூக்கி வீசிவிட்டு நீரில்மூழ்கியுள்ளார்.
பொதுமக்கள் இரண்டு சிறுவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நாராயணனின் மனைவி அனுஷ்யா மற்றும் சகோதர்ர் ரவி ஆகிய இருவரையும் காப்பாற்றினர். ஆனால் நாராயணன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் உதவி நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் படகு மூலம் நேற்று பிற்பகல் நாராயணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் நாராயணின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடலை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக நாராயணின் உடல் தற்போது நெல்லை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஆசிரியர், ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நண்பர்களுடன் நீர்தேக்கத்திற்கு குளிக்கச் சென்ற மருத்துவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு!