திருநெல்வேலி: தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் ஒவ்வொரு வகையான பழங்குடியினர் பூர்வகுடிகளாக வசித்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடிகளாக காணி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாபநாசம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிக்குழி, பெரிய மைலார், சின்ன மைலார், அகஸ்தியர் காலனி, சேர்வலாறு ஆகிய இடங்களில் பரம்பரை பரம்பரையாக இந்த காணி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயம் பிரதான தொழில்: 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மேற்கண்ட ஐந்து இடங்களிலும் மொத்தம் 158 குடும்பத்தைச் சேர்ந்த 442 காணி பழங்குடி மக்கள் இங்கு வசிக்கின்றனர். விவசாயம் தான் இவர்களின் பிரதான தொழிலாகும். மேலும் தேன் எடுப்பது, மரவள்ளிக்கிழங்கு, வாழை விவசாயம் செய்கின்றனர். கடுகளவு கூட ஆடம்பரத்தை விரும்பாத இம்மக்கள் குறைவான வசதியுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
வனத்துடன் ஒன்றி வாழும் இவர்கள் காடுகளின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருப்பார்கள். சுகாதாரமான வாழ்விடம், குடிநீர், உணவு ஆகியவை தான் இவர்களின் வாழ்வியல் அங்கமாகும். பூர்வ குடிகளாக வாழ்ந்து வந்தாலும் சமீப காலமாக இதுபோன்ற பழங்குடியினர்கள் வனத்துறையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
சின்ன சின்ன விஷயத்துக்கு அனுமதி: குறிப்பாக தாங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிய அரசு அங்கீகாரம் இல்லாததால் சின்ன சின்ன விஷயத்துக்கும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். மின்சாரம், கல்வி, பேருந்து வசதி என பல்வேறு விஷயங்களுக்காக இம்மக்கள் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற விஷ்ணு காடுகள் மீதும் காடுகளை சார்ந்த பழங்குடி மக்கள் மீதும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவ்வப்போது ரகசியமாக மலை பயணம் மேற்கொண்டு, அங்கு வசிக்கும் பழங்குடி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மின்சாரம்: வெறும் காகிதங்கள் மூலம் அல்லாமல் நேரடியாக சென்று மக்கள் படும் இன்னல்களை அறிந்து கொண்டார். இதையடுத்து காணி பழங்குடி மக்களின் வாழ்வை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பழங்குடி மக்களுக்கு சோலார் அமைத்து மின்சாரத்தை உறுதி செய்தார்.
காணி பழங்குடி மக்களுக்கும் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாட்டின் முதல் முறையாக பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களை நகர்ப்பகுதியில் விற்பனை செய்ய காணி வாழ்வியல் அங்காடி ஒன்றை மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் திறந்துவைத்தார்.
பட்டா: நெல்லையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின்போது காணி பழங்குடி மக்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அவர்கள் குறித்த குறும்படம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மூலம் வெளியிட வைத்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பட்டா இன்றி எந்த வித அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்து வரும் காணி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்திருப்பது அம்மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணிக்காரர்கள் என்றாலே நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என்பது தான் பொருள். ஆனால் காணி மக்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களை சந்திக்கும்போதெல்லாம் தங்களுக்கு பட்டா வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதை கனிவுடன் ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பட்டா வழங்குவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வு செய்து உடனடியாக அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிட்டுள்ளார்.
பணிகள் தீவிரம்: அதன்படி தற்போது வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006-ன் கீழ் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறையினர் சமீபத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று பட்டா வழங்குவது தொடர்பாக இடங்களை சர்வே செய்தனர்.
பட்டா இல்லாததால் தற்போது பழங்குடி மக்கள் தங்களுக்கான வாழ்விடத்தை மேம்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக வீடு கட்டுவதற்கு மணல், செங்கல், கம்பி உள்ளிட்ட எந்த பொருள்களையும் மேலே எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதி அளிப்பதில்லை.
பழங்குடி மக்கள் மகிழ்ச்சி: அதேபோல் வங்கியில் லோன் வாங்குவது முதல் குடும்ப அட்டைகள் பெறுவது வரை பல்வேறு விஷயங்களுக்கு பட்டா முக்கிய சான்றாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பது காணி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து காணி பழங்குடி மக்கள் கூறுகையில், "100 ஆண்டுகளுக்கு மேல் பரம்பரை பரம்பரையாக இங்கு வசித்து வருகிறோம். தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார். பட்டாவுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது பட்டா வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பட்டா கிடைப்பதனால் வங்கியில் கடன் வாங்க முடியும். அதன் மூலம் எங்கள் வாழ்விடத்தை மேம்படுத்த முடியும். எங்கள் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை எங்களுக்கு பட்டா கிடைக்கும் என்று" எனத் தெரிவித்தனர்.
விரைவில் நல்ல முடிவு: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறும்போது, "காணி பழங்குடி மக்களின் வாழ்வை மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும்" என்றார்.
வனத்துறை அலுவலர் செண்பக பிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "பட்டா வழங்குவது தொடர்பாக தகுதியானவர்களாக கண்டறியப்பட்டவர்கள் உண்மையாகவே பழங்குடி மக்கள் தானா என்று ஆராய்ந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டா வழங்க புதிதாக அரசாணை எதுவும் போடத் தேவையில்லை. வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006-ன் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்டா வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதன் மூலம் காணி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கும் விவகாரத்தில் வனத்துறை அனுமதியும் கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 78 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் விரைவில் பட்டா வழங்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: மலை பிரதேசங்களில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடக்கூடாது - நீதிமன்றம் கேள்வி