திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆறு மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்ற நிலையில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கான 436 எம்பிபிஎஸ் மற்றும் 97 பிடிஎஸ் இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று (ஜன.28) தொடங்கியது. இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 2135 பேர் விண்ணப்பித்து நிலையில் 719 பேர் கலந்து கொண்டனர். இன்று முதல் நாளில் நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் இடம் ஒதுக்கீடு கிடைத்துள்ளது
இந்தப் பள்ளியைச் சார்ந்த ஞான லிசி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும், காயத்ரி என்பவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சவுந்தர்யாவுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகாவிற்கு கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மேலும் நாளை நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு இந்தப் பள்ளியைச் சார்ந்த ஜாஸ்மின் என்ற பத்தாம் வகுப்பு மாணவி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : நீட் தேர்வில் வென்ற முசிறி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு!