திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா இறப்பு கணக்கின் முழுவிவரம் பற்றி தெரிந்துக்கொள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்டத்தின் அரசு பொது மருத்துவமனையின் பொது தகவல் அலுவலருக்கு மனு ஒன்று அளித்திருந்தார்.
அதில், மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்கள் என்னென்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர், கரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய அரசு எவ்வளவு தொகை ஒதுக்கி உள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த மனுவுக்கு தகவல் அலுவலர் தற்போது அளித்த பதிலில், நெல்லையில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் 285 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அதன்படி மே மாதம் ஒருவர், ஜூன் மாதம் 11 பேர், ஜூலை மாதம் 131 பேர், ஆகஸ்ட் மாதம் 142 பேர் என மொத்தம் இதுவரை 285 பேர் உயிரிழந்ததாக கூறினார்.
ஆனால், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில், தினமும் அளிக்கப்படும் கரோனா பாதிப்பு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 185 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே 285 உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த நூறு பேர் கணக்கில் காட்டாதது அம்பலமாகியுள்ளது. மேலும் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறிப்பிடவில்லை. இதன் மூலம் நெல்லையில் கரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை கையாள்வதில் பெரும் குளறுபடியுடன் முறைகேடு நடப்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா இறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் கே.சி. கருப்பணன்