திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் மூலமாக ஏழை எளிய மக்கள் பசியாறிவருகின்றனர். இதனிடையே பல்வேறு பகுதிகளில் உணவகம் செயல்படுவதில்லை என்றும் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாநகரத்திற்குட்பட்ட மனக்காவளம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாமல், பன்றிகளுக்காக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இட்லிகள் 2 ரூபாய்க்கு பன்றிகளுக்கு உணவாக விற்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டும் திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகிவருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியின் ஏழாவது வார்டு உறுப்பினர் இந்திராவின் கணவர் சுண்ணாம்புமணி என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார். இந்த உணவகத்தில் தரமான உணவுகள் வழங்கப்படவில்லை. உணவிற்காக வரும் காய்கறிகளை அங்குள்ள பணியாளர்கள் பங்கு போட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக காலை உணவான இட்லி மட்டுமல்லாது, இதர உணவுகளும் பன்றிகளுக்கு உணவாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்காக ஊழியர்கள் பணம் பெறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை