திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. திமுக முன்னாள் மேயரான இவர் தனது கணவருடன் வசித்துவந்தார். இச்சூழலில், நேற்று மாலையில் அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூன்று பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இச்சம்பவத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம். வீட்டில், பீரோக்கள் உடைக்கப்பட்டு நகைகள், சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன. மேலும் நகை, பணத்திற்காக இந்தக் கொலை நடந்து இருக்கலாம். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி, நெல்லை காவல் ஆணையருக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.