திருநெல்வேலி: மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுடன், ஆங்காங்கே முகாம்கள் அமைத்து கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசி முகாம்
பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் நரிக்குறவர் இன மக்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நேற்று (ஜூன்.26) மாநகராட்சி நல அலுவலர் சரோஜா தலைமையில் மருத்துவக் குழுவினர் அங்கு சென்றனர்.
ஆனால், அவர்களுக்கு தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்புத் தெரிவித்தனர். அவர்களுடன் பேசியபோது, தடுப்பூசியினால் சிலர் இறந்தது தொடர்பாக கேள்விப்பட்டதால், அது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதை அலுவலர்கள் அறிந்துகொண்டனர்.
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
கரோனா தடுப்பூசி குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்கள் முயன்றனர். ஆனால், அவர்கள் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.
தாங்கள் காக்கா, கொக்கு ஆகியவற்றின் இறைச்சியை உண்பதால், தங்களுக்கு கரோனா வராது என்றும், கத்தியால் குத்தினாலும் பிரச்னையில்லை; தடுப்பூசி வேண்டாம் எனவும் விடாப்பிடியாக நரிக்குறவர் இன மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட மறுப்பு
பல கட்ட முயற்சிக்குப் பின்னரும், அவர்கள் தடுப்பூசி செலுத்த ஒப்புக் கொள்ளாததால் மருத்துவக் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ்நாடு அரசு பல விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியபோதும் கூட, மாவட்டத்தின் முக்கிய நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், அது குறித்து விழிப்புணர்வின்றி நடந்து கொண்டது அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்டா பிளஸ் முதல் மரணம்!