திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அனைத்து அரசியல் கட்சியும் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் 2021 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவ்வப்போது நெல்லையில், முகாமிட்டு பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கோபத்தை கிளப்பியுள்ளது. வெளியூர் நபரான ரூபி மனோகரன் போட்டியிட்டதால்தான் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும், இனி நாங்குநேரி தொகுதியில் உள்ளூர் நிர்வாகிகள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 15) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வானமாமலை தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உடனடியாக மாவட்டத் தலைவரை நியமிக்கவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி அதில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானமாமலை, நாங்குநேரி இடைத்தேர்தலில் கெடுவாய்ப்பாக எங்கள் வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு ரூபி மனோகரன் இந்தத் தொகுதியில், முகாமிட்டு மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளர் போல செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் தொகுதியில் பல முன்னணித் தலைவர்கள் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் குறைந்தபட்சம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கோ வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி எங்களது கருத்தை தலைமைக்கு கொண்டு செல்வோம். வெளியூர் நிர்வாகிகளை நிறுத்தியதால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தாக மக்களே கூறுகின்றனர். வருகின்ற தேர்தலில் உள்ளூர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஒரு வேளை வெளியூர் நபரை அறிவித்தால், எங்களது எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரூபி மனோகரனை ஊடகங்கள்தான் பெரிய ஆளாக காட்டுகின்றன என்றும் வெளியூர் நிர்வாகிகள் வருவதால் எந்த திட்டங்களும் நாங்குநேரி தொகுதியில் முறையாக செயல்படுத்தவில்லை என்றார்.
இதையும் படிங்க: அடிப்படை கல்விக்காக ஏங்கும் சாமானியர்கள்: கனவை நிறைவேற்றியதா 'கற்போம் எழுதுவோம் இயக்கம்'