திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி நாங்குநேரி தொகுதி முழுவதும் முழு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 170 மையங்களில் 299 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 460 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. நாங்குநேரி தொகுதியில் இரண்டாயிரத்து 571 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் பயன்படுத்தப்படுகிறது.
71 மையங்களில் 146 மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் வாக்கு செலுத்துகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.