நெல்லை: நாங்குநேரியில் சாதிரீதியான விரோதம் காரணமாக பிளஸ்2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரவு சின்னத்துரைக்கு என்ன நடந்தது என்று மாணவனின் தாய் அம்பிகாவதி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
ரத்தத்தை பார்த்ததும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்..
அன்று இரவு 10 மணி இருக்கும் திடீரென மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்தனர்,அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த எனது மகனை நோக்கி கொலை வெறியுடன் வெட்ட தொடங்கினான். ஓடிச் சென்று தடுக்க முயன்ற போது என்னை, காலால் எட்டி உதைத்தான். மகன் ”இரத்தம் சிந்துவதை கண்டு நான் மயங்கி விழுந்தேன்” தடுக்க சென்ற எனது மகளையும் வெட்டினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் எனது மகனை வெட்டி சரித்துவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். ஊருக்கு வெளியே மூன்று மாணவர்கள் அவர்களை தப்பிக்க வைத்துள்ளனர்.
ஊருக்குள் செல்ல எங்களுக்கு அச்சமாக உள்ளது,எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
வெட்டிய மூன்று பேரும் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் தான் ஒன்றாக பழகியவர்கள் தான் ஆனால் சாதி வெறியால் இது போன்று நடந்து கொண்டனர். இது போன்ற பிரச்சினை இருப்பதாக எனது மகன் என்னிடம் முதலில் கூறவில்லை. பள்ளியில் வைத்து கடைக்கு சென்று பீடி சிகரெட் கஞ்சா வாங்கி வரும்படி எனது மகனை துன்புறுத்தியுள்ளனர். இந்த காலத்தில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் சாதி பாகுபாடு இருக்கிறது. விருந்தில் ஒன்றாக அமர்ந்து நாங்கள் சாப்பிட முடியாது. எங்கள் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் நாங்கள் உள்ளே சென்று சாமி கும்பிட முடியாது. இப்போதும் ’வெளியே நின்று தான் நாங்கள் சாமி கும்பிடுவோம்’ குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கும் சம்பவம் எங்கள் ஊரிலும் நடந்து உள்ளது. எனவே சாதியை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். நாம் நான்கு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனவே அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அம்பிகாவதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது குறித்து அம்பிகாவதியின் மகள் நம்மிடம் கூறும் போது அன்னைக்கு 3 பேர் அண்ணனை வெட்ட வந்தார்கள் நீங்கள் பட்டியலின சமுகத்தை சார்ந்தவர்கள் தானே எப்படி எங்களை பற்றி பள்ளியில் புகார் அளிக்கலாம் என்று கூறினார்கள். நான் தடுக்க சென்ற போது என்னையும் வெட்டினார்கள் என தெரிவித்தார்.
சாதிகளை வேரறுக்க வேண்டும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என ஆதி காலம் தொடங்கி டிஜிட்டல் யுகத்தில் வாழும் இக்காலம் வரை பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் தற்போது வரை சாதிகள் ஒழிந்தபாடில்லை. அதே சமயம் சாதி பெயரை சொல்லி பல வன்முறைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. குறிப்பாக எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பை வகிக்கும் இளம் மாணவர்கள் நெஞ்சில் சாதி வன்மத்தை புதைக்கும் கொடூர நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சாதி வன்மத்தின் உச்சபட்சமாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல இன வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது சினிமா நடிகர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என அடுத்தடுத்து இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :நைஜீரியாவில் மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!