அதிமுக சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய 177 வேட்பாளர்களின் பெயர்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 10ஆம் தேதி அன்று அறிவித்தார்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரியில் தச்சை கணேசராஜா, பாளையங்கோட்டை தொகுதியில் ஜெரால்டு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரு வேட்பாளர்களும் திருநெல்வேலிக்கு வருகை தந்தனர். மாவட்ட அதிமுகவினர் சார்பில் இவர்கள் இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தச்சை கணேசராஜா, ஜெரால்டு ஆகியோர் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நாங்குநேரி வேட்பாளர் தச்சை கணேசராஜா கூறும்போது,
"நாங்குநேரி தொகுதியைப் பொறுத்தவரை மக்களின் அன்றாட தேவையான சாலைப் பிரச்னை தொடங்கி பல்வேறு பணிகள் ஆளும் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த பொங்கல் பரிசு உள்பட பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது.
இந்தப் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் உள்ளது. எனவே வாழை விவசாயிகளை கருத்தில்கொண்டு மிகப்பெரிய தொழிற்கூடம் ஒன்று இங்கு உருவாக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இங்கு சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரம் பரப்பளவு கொண்ட விஜயநாராயணபுரம் பெரியகுளம் பாதுகாக்கப்பட்டு தண்ணீரை சேமிக்கும் சிறு அணையாக உருவாக்கப்படும். அது மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்திலும் பாதுகாப்பான முறையில் தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2019ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக அளவில், அதாவது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவேன்" என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஜெரால்டு கூறும்போது,
கடந்த 25 ஆண்டுகளாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு எந்தத் திட்டங்களும் சென்றடையவில்லை.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லக்கூடிய பாளையங்கோட்டையில், அரசு உயர்நிலைப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் இன்னும் கொண்டுவரப்படவில்லை. இதற்காக நான் பாடுபடுவேன். இந்த பாளையங்கோட்டை தொகுதியை அதிமுகவின் கோட்டை எனப் பேசும்படி உருவாக்குவேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுகவில் இனைந்த கரூர் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகி!