சிவபெருமான் திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா டிசம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆருத்ரா தரிசன திருவிழா
திருவிழா நாள்களில் காலை, மாலை ஆகிய வேளைகளில் பெரிய சபாபதி சன்னதி முன்பு மாணிக்கவாசகர் திருவெண்பாவை பாராயணம் நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடந்துவந்தது.
இந்நிலையில், ஆருத்ரா தரிசன திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு தாமிர சபையில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், தாமிர மண்டபத்தில், சுவாமி நடராஜப் பெருமானுக்குச் சிறப்புத் திருமுழுக்கும், செப்பு கேடயத்தில் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன.
ஆனந்த தாண்டவம்
இதையடுத்து, கோபூஜையும் தொடர்ந்து, திருவெம்பாவை பாராயணம் பாடப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்