நெல்லை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரபெருமாள் (27). இவர் கொக்கிரக்குளம் இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
நள்ளிரவு இரண்டு மணியளவில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதியினர், தீயை அணைக்க முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் கருகி சாம்பல் ஆனது.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுந்தரப்பெருமாள் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர், தடயவியல் அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இருசக்கர வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே ஆர்எஸ்எஸ் அலுவலகம் இருப்பதால், இந்த தீவிபத்தில் வேறு ஏதாவது காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.