பொள்ளாச்சியில் அரசியல் பலம் பணபலம் படைத்த இளைஞர்கள் சிலர் இளம் பெண்களை தங்கள் காதல் வலையில் சிக்க வைத்து தனி அறையில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நாகர்கோவில் மாவட்டத்திலும் காசி என்ற வாலிபர் இளம் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அரங்கேறியது.
இந்த நிலையில், பொள்ளாச்சி நாகர்கோவிலை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தற்போது இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
திருமணத்திற்கு முன்பு முக்கூடல் கண்டபட்டி பகுதியைச் சேர்ந்த சாலமன் என்பவர் என்னுடன் நெருங்கிப் பழகினார். அப்போது அவர் தனது நண்பர்களான மனோசேட், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து எனக்கு தெரியாமலையே என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்தார். வெளியில் கூறினால் வீடியோவை வெளியிட்டு அசிங்கப்படுத்துவோம் என்று தொடர்ந்து மிரட்டினார்.
எனது பெற்றோரிடம் தெரிவித்த பிறகு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எனது கணவர் மற்றும் மாமனார் செல்போன்களுக்கு எனது ஆபாச வீடியோக்களை அனுப்பினார்கள். இதனால் தற்போது எனக்கும் கணவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து என்னை மிரட்டி வரும் சாலமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
ஆனால், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலர்கள் இந்த மனுவை விசாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண், சேரன்மகாதேவி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப்பை நேரில் சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து முறையிட்டார்.
இதையடுத்து, துணை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின்பேரில் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது முக்கூடல் கண்டபட்டி பகுதியை சேர்ந்த சாலமன், மனோசேட், ஜான்சன் ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
மூன்று பேருக்கும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது கஞ்சா புகைப்பது உள்ளிட்ட போதை பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மூன்று பேரும் சேர்ந்து தங்கள் பகுதியில் உள்ள இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை தவறாக வீடியோ எடுத்து மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சாலமன் இளம் பெண்களை எளிதில் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த சூழலில் தான் சாலமன் தற்போது பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெருங்கி பழக ஆரம்பித்தார். அந்த இளம் பெண்ணும் சாலமனை நம்பி அவருடன் பல்வேறு இடத்திற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது சாலமன் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். ஒருகட்டத்தில் சாலமனின் நடவடிக்கை பிடிக்காமல் இளம்பெண் அவரை விட்டு விலகியுள்ளார்.
அப்போது சாலமன் தான் எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி மீண்டும் தன்னுடன் தனியாக வர வேண்டும் இல்லாவிட்டால் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்ற அச்சத்தில் வேறுவழியில்லாமல் இளம் பெண்ணும் அடிக்கடி சாலமனுடன் சென்று வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தனது பெற்றோரிடம் இளம்பெண் நடந்த்தை தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர்கள் வழங்கிய அறிவுரையின் பேரில் இளம்பெண் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சாலமன் மீண்டும் ஆபாச வீடியோக்களை காட்டி தனியாக அழைத்து உள்ளார். அதற்கு இளம் பெண் மறுக்கவே அவரது கணவர் மற்றும் அவரின் மாமனார் செல்போன் நம்பருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் கணவர் இளம்பெண்ணிடம் சண்டை போட்டு வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. தவறான நட்பால் தனது வாழ்க்கையை தானே சீரழித்த இளம்பெண் இறுதியாக தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்த வழக்கில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "சாலமன், ஜான்சன், மனோசேட் ஆகிய மூவரும் சேர்ந்து தான் இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
ஜான்சன் மீது மற்றொரு பெண் அளித்த புகாரின் பேரில் அவரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம். தற்போது பாதிக்கப்பட்ட பெண் திருமணமான நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தால் குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுள்ளதாக எங்களிடம் முறையிட்டார். இதுகுறித்து உடனடியாக முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சாலமன் மற்றும் மனோசேட் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம்.
இருவரின் செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம். பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பெண்களுடன் பழக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.