திருநெல்வேலி: தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலகாரம், புத்தாடை, பட்டாசுகள் தான். தீபாவளி பண்டிகையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இப்பண்டிகைக்கு உற்றார் உறவினர்கள் அனைவரும் இனிப்பு மற்றும் பல்வேறு சுவையான பலகாரங்களை கொடுத்து வாழ்த்து கூறுவர்.
முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது கை பக்குவதத்தில் வீடுகளிலேயே பல சுவையான பலகாரங்களை செய்து சாப்பிட்டும், அதை தங்கள் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தனர். ஆனால் காலப்போக்கில் இப்பழக்கம் மாறியது.
குவியும் ஆர்டர்கள்
அதாவது வீட்டில் பலகாரங்கள் செய்வதற்கு பதில் கடைகளில் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது தான் லேட்டஸ்ட் டிரெண்ட் ஆக உள்ளது. இதற்கென பலகாரம் தயாரிக்கும் பணிகளில் இனிப்பு கடைகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் பலகாரம் வகைகள் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற லாலா கடை மும்முரம் காட்டி வருகிறது.
தீபாவளி பண்டிகைகளுக்கான ஆர்டர்கள் வரத்தொடங்கியதால், வழக்கமாக செய்யப்படும் பாதுஷா, ஜாங்கிரி, மிக்சர், முறுக்கு, மைசூர் பாகு, போன்றவைகளை விட, புது வகையான இனிப்பு வகைகளையும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாலா கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கமாக வரும் ஆர்டர்களை விட இந்த ஆண்டு தொழில் நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கும், தொழிற்சாலைகளில் பணி செய்பவர்களுக்கும் புது வகையான இனிப்பு வகைகளை வழங்க ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
100 வகை அல்வா
லாலா கடையில் இந்த ஆண்டில் மட்டும் அல்வாவிலேயே 100 வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி அல்வா தவிர்த்து ரோஜா பூ அல்வா, முந்திரி அல்வா, நெய் அல்வா ,கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா அல்வா, பேரீச்சை அல்வா, வெள்ளரி அல்வா, அசோகா அல்வா, பாதாம் அல்வா, மஸ்கட் அல்வா போன்ற 100 வகைகளில் தயார் செய்துள்ளனர்.
இது தவிர வட மாநில இனிப்பு வகைகளான மில்க் குல்பார், கல்காண்ட், அஜ்மீர் பர்ஃபி, பேபி மில்க் கேக், ஆந்திரா பர்ஃபி, பைனாபில் மில்க் கேக், மலாய் டோஸ்ட், மில்க் டைமண்ட், சம்பக்ளி, காஜூ பான்,காஜூ கத்தளி, காஜூ ரோல், தோடா பர்பி, அஜ்மீர் கேக், மில்க் கேக், கேசர் பேடா, மலாய் பேடா, பெங்காலி வகைகளான ரசகுல்லா, ரசமலாய், பாசந்தி, ஃபின்லி பேடா, பன்னீர் ஜாமூன் போன்றவைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
வடமாநில இனிப்பு பலகாரங்கள் தயார் செய்வதற்கென பிரத்யேகமாக வெளிமாநிலத்தில் இருந்து மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டு, தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு வகைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும் காரச்சேவு பக்கோடா போன்ற கார வகைகளும் செய்யப்படுகிறது.
வட மாநிலத்திலிருந்து ஆள்கள் வரவழைப்பு
இதுகுறித்து பாளையங்கோட்டையில் 120 ஆண்டுகள் பாரம்பரியமாக இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கூறுகையில், “திருநெல்வேலியில் கடந்த 120 ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம். தற்போது தீபாவளி நெருங்குவதால் பல்வேறு வகையான இனிப்புகள் தயார் செய்து வருகிறோம். வட மாநில இனிப்பு வகைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது” என்றார்.
சுப்பிரமணியன் மகன் அரவிந்த் கூறுகையில், “பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் நான்கு தலைமுறையாக செய்து வரும் தொழில் என்பதால் அதில் இறங்கி உள்ளேன்” எனப் பெருமையுடன் தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விற்பனையாகும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கரோனா போன்ற பல்வேறு இன்னல்களில் கடந்த ஆண்டுகளில் சிக்கித் தவித்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட தீபாவளிக்கு ஒரு சில நாள்களுக்கு முன்னதாகவே விற்பனை சூடுபிடித்து இருப்பதாக லாலா கடை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருது சகோதரர்கள் - இந்திய விடுதலைப்போரின் இணையற்ற அடையாளம்