திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அகிலா (24) கர்ப்பிணியான இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் களக்காடு அருகே திருக்குறுங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3:00 மணியளவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்பொழுது, மருத்துவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பணியிலிருந்த செவிலி பிரசவம் பார்த்துள்ளார். மாலை 6:45 அளவில் அகிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின் திடீரென தாயிற்கும், குழந்தைக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த செவிலி, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார்.
அங்கிருந்து மருத்துவர்கள், இரவு 8 மணி அளவில் சேய், தாய் ஆகியோர் இறந்ததாக உறவினர்களிடம் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலாவின் உறவினர்கள், கட்டளை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நாங்குநேரி வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.