திருநெல்வேலி: நெல்லை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக சியுஜி சிம் கார்டுடன் கூடிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. நெல்லை டவுன் காவல் நிலையத்திலும் அது போன்ற ஒரு மொபைல் போன் வழங்கப்பட்டு காவல் துறையினரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 29) இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், தனது போன் உடன் சேர்த்து காவல் நிலையத்தில் உள்ள போனையும் காவல் நிலையத்தில் இருந்த மேஜை ஒன்றில் வைத்து விட்டு இரவில் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
பின்னர், காவல் நிலையம் திரும்பும்போது அதிகாலை 3 மணிக்கு டேபிளில் வைத்த செல்போனை தேடியுள்ளார். அப்போது, இரண்டு போன்களும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மறந்து வேறு எங்கும் வைத்து விட்டோமா என காவல் நிலையத்தை சல்லடை போட்டு தேடியுள்ளனர். இரவு பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரும் முதல் நிலை காவலர் பணியில் ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். செல்போன் திருடுபோன இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை வரை செல்போனைத் தேடிய நிலையில், செல்போன்கள் இரண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், வேறு வழியின்றி இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், காவல் நிலையத்திலிருந்து செல்போன்கள் திருடு போனதா அல்லது வேறு எங்கேயும் விழுந்ததா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடைபெற்றது. இரவில் விசாரணைக்கு வந்த நபர்கள் யாரும் செல்போன்களை திருடிச் சென்று விட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு செல்போன் திருடிய நபரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற நபர் டவுன் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருவதும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு கடையில் சம்பளம் கொடுக்காததால் அது குறித்து நள்ளிரவு புகார் செய்வதற்காக காவல் நிலையம் வந்தபோது, இரவுப் பணியில் இருந்த எஸ்ஐ தூங்கிக் கொண்டிருந்ததை இப்ராஹிம் நோட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வேறு யாரும் காவல் நிலையத்தில் இல்லாததை அறிந்து கொண்ட இப்ராஹிம், மேஜையில் இருந்த இரண்டு செல்போன்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காவல் நிலையம் மற்றும் அருகில் இருந்த பிற கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் இப்ராஹிமை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவரிம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சேலம் பிரியாணி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்.. ரவுடி கும்பலுக்கு திமுகவினர் ஆதரவு - கடை உரிமையாளர் புகார்..