திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, தேசியக் கட்சியான பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.
அதேசமயம் நீட்தேர்வு, சிஏஏ, மதவாத மோதல்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. எனவே இந்தத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது என்றும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக படுதோல்வி அடையும் என்றும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இந்தக் கருத்துகளை தவிடுபொடியாக்கும் வகையில் தேர்தலில் பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருப்பதுடன் அதிமுகவும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளது.
ஸ்டாலினின் அரசியல் நாகரிகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசியல் நாகரிகத்தைக் கடைபிடித்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழாவின்போது ஆளுநர் விருந்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பன்னீர்செல்வத்தை தனது அருகில் அமரவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதுமட்டுமில்லாது, பதவியேற்ற சில நாள்களிலேயே அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்தியது, கரோனோ தடுப்பு கண்காணிப்புக் குழுவில் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இடம்பெறச் செய்தது போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் இந்த நடவடிக்கைகள் பிற கட்சியினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்டாலினின் வழியில் நெல்லை எம்எல்ஏக்கள்
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் வெற்றிபெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தைக் கையாண்டு வருகிறார். நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த காலங்களில் பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை. ஆனால் நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (மே.17) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் கலந்து கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு கரோனோவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மையத்தினை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆய்வுக்குச் சென்றனர். அப்போது அந்தக் காப்பகத்தில் இருந்த சிறுவன் ஒருவனிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நலம் விசாரித்தார்.
இந்தியில் பேசிய பாஜக எம்எல்ஏ, வரவேற்ற திமுக அமைச்சர்!
அந்தச் சிறுவன் வட மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஹிந்தியில் பேசியதை அடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு மௌனமாக இருக்கவே, அருகில் இருந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஹிந்தியில் பேசி அந்த சிறுவனிடம் பெயர் மற்றும் விவரங்களைக் கேட்டறிந்தார். இதை கவனித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "இதுக்கு தான் தேசியக் கட்சி வேணும்" என்று நக்கலாகக் கூறினார்.
இதைக் கேட்ட அலுவலர்களும் பத்திரிகையாளர்களும் ஒரு நிமிடம் வாய்விட்டு சிரித்தனர். பொதுவாக, தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் இந்தி திணிக்கப்படுவதாக கருத்து எழுகிறதோ அப்போதெல்லாம் முதல் ஆளாக குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக தான். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோதும் சரி தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் சரி, தொடர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு வகைகளில் குரல் கொடுத்து வருகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆய்வுக்கு சென்ற இடத்தில், தேவை ஏற்பட்டதையடுத்து பாஜக எம்எல்ஏ இந்தியில் பேசியதும், கட்சியின் கொள்கைக்கு அப்பாற்பட்டு திமுக அமைச்சர் அதை வரவேற்றுப் பேசியதும் அரசியல் நாகரிகத்தின் அடுத்த மைல்கல் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: நெல்லையில் தாமரையை மலர வைத்து அதிரடி காட்டும் நயினார் நாகேந்திரன்: பாராட்டும் மக்கள்!