திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனது, திருடு போனது, வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களிலிருந்து வரும் புகார்களை நெல்லை சைபர் கிரைம் காவல் துறை விசாரணை செய்து நவீன தகவல் தொழில்நுட்பம் உதவியுடன் பொருள்களை மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணாமல்போன, திருடுபோன ஆறு லட்சத்து ஏழாயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான 50 செல்போன்களை சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த செல்போன்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (ஜூன்.02) உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள், மாவட்டக் காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை, காணாமல் போன 25 லட்சத்து 19 ஆயிரத்து 75 ரூபாய் மதிப்பிலான 214 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.