தூத்துக்குடி: தமிழ் சாலை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் சுமார் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் பணிகளை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோருடன் செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சாமிநாதன், "தூத்துக்குடி நகராட்சி நகர்மன்றத் தலைவராக குரூஸ்பர்னாந்து பணியாற்றிய காலத்தில், வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் முதலில் கொண்டு வந்தவர். தற்போது குரூஸ்பர்னாந்து பெயரில்தான் பழைய மாநகராட்சி கட்டடம் இயங்கி வருகிறது. இந்நிலையில், குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கும், அமைச்சருக்கும் கோரிக்கை வந்தது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலை தமிழ்சாலை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் குரூஸ்பர்னாந்து சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட இடம் ஓதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 13ஆம் தேதி குரூஸ்பர்னாந்தின் மணிமண்டபத்தை காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் மணிமண்டபத்தையும் முதலமைச்சர் திறந்து வைப்பதாக தெரிவித்தார். மேலும், இது போன்று அரசு தியாகிகள், தலைவர்களின் நினைவைப் போற்றும் வகையில் புதிதாக மணிமண்டபம், நினைவிடங்கள் கட்டப்படும் என வெளியிட்ட அறிவிப்பாணை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் சமூக நீதிக்காக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனாருக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என கூறிய நிலையில், அந்த இடத்தை பார்வையிட்டு இருக்கின்றோம். விரைவில் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே மண்டபம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையும் ஆய்வு செய்து தொடர்ந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என தெரிவித்தார்.