திருநெல்வேலி: ‘வேண்டும் மோடி மீண்டும் மோடி’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஜூன் 28ஆம் தேதி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி 23 நாட்கள் 41 சட்டமன்ற தொகுதியில் பயணம் மேற்கொண்டு, முதற்கட்ட யாத்திரையை நெல்லை சட்டமன்ற தொகுதியில் நேற்று (ஆகஸ்ட் 22) நிறைவு செய்தார்.
இந்த முதல் கட்ட யாத்திரை நிறைவு பயணம் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாறையடி பகுதியில் தொடங்கி சாலியர் தெரு, நயினார் குளம் சாலை, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பாரதியார் தெரு, வ.உ.சி தெரு வழியாக சென்று வாகையடி முனையில் நிறைவு பெற்றது. இந்த யாத்திரையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களான ஏசி சண்முகம், தேவநாதன் யாதவ் மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா, கருப்பு முருகானந்தம், கேசவ விநாயகம், நரேந்திரன், பொன் பாலகணபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிறைவு விழா பொதுக்கூட்டம் டவுண் வாகையடி முனையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், "என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டின் விதியை அண்ணாமலை தலைமையில் மாற்றி அமைக்கப் போகிறது. இந்த யாத்திரை அண்ணாமலை தலைமையில் நடைபெறுவது தமிழக மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காக நடப்பது இந்த யாத்திரை. தமிழக மக்களுக்கு நன்மையையும், மாற்றத்தையும் தருவதற்காக இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் மாற்றம் மக்களிடம் ஏற்படும் மனமாற்றத்தில் இருந்து உருவாகும். அதை இந்த யாத்திரை செய்து வருகிறது. தமிழகத்தில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து வருகிறது. அதனை இந்த யாத்திரை மாற்றி அமைக்கும்.
தமிழகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பிரிக்கும் வகையில் தவறான தகவல்களை தந்து திமுக அரசு மக்களிடம் பிரிவினை வாதத்தை தூண்டி விடுகிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் காங்கிரஸ் ஆட்சியில் தான் கொள்ளடிக்கப்பட்டது. திமுகவும், காங்கிரசும் குடும்பத்திற்காக நடத்தும் கட்சி, மக்களைப் பற்றி எந்த கவலையும் அந்த கட்சிகளுக்கு கிடையாது.
திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும். ஊழல் குடும்ப நலன் மக்களை வஞ்சிப்பது மக்களை பிரிப்பது தான் திமுகவின் பணியாக உள்ளது. காங்கிரசும், திமுகவும் அவர்களது மகன்களை பதவிக்கு கொண்டு வருவதற்குத் தான் பணி செய்து வருகிறது. மக்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதற்கு பணம் வாங்கி ஒரு அமைச்சர் சிறை சென்றுள்ளார். அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டபோது கொள்ளை அடிக்கப்பட்ட கோடி கோடியான ரூபாய் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியா வளர்ச்சியை பாதிக்கும் வகையில் நடைபெறும் ஊழல் ஆட்சியை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. அதிமுக, பாஜக கூட்டணி என்பது பழமையான கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. இந்த கூட்டணி தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும். தமிழகம் உயர்ந்தால் தான் இந்தியா உயரும் என பிரதமர் சொல்கிறார். தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாரத பிரதமர் தொடர்ந்து பணி செய்து வருகிறார்.
சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக 2 ஆயிரத்து 417 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மோடி எந்த நாட்டிற்கு சென்றாலும் உலகின் பழமையான மொழி தமிழென்று பெருமையுடனும், பெருந்தன்மையுடனும் சொல்லி வருகிறார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி இல்லாத போதும், மத்திய அரசுடைய திட்டங்களை தமிழகத்தில் முறையாக அமல்படுத்தாத போதிலும் தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் தொடர்ந்து தந்து கொண்டுதான் இருக்கிறார். குடும்ப ஆட்சி, ஊழல் அடக்குமுறை என அனைத்தையும் மீறி வெற்றி பெறுவோம். தமிழகத்தில் விரைவில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?