தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை மக்களை ஆட்டி படைத்து வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் கருப்பு பூஞ்சை நோயும் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய் வருவதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத சூழ்நிலையில், நீரழிவு நோயுள்ள கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்டிராய்டு மருந்து காரணமாக, இந்த நோய் பரவுகிறதா என்பது குறித்தும் மருத்துவ வல்லுநர் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், கருப்பு பூஞ்சை நோய் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் மூன்று பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 40 வயது பெண் ஒருவர் இன்று (மே. 30) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே கம்பம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே உடலில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகவும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் எளிதில் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்தப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் கறுப்பு பூஞ்சை தொற்று பதிவாகவில்லை - அமைச்சர் எஸ்.எஸ். சங்கர்