திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நெல்லை வந்த வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனும், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றத்திற்கான முன்னுரையாக, முன்னோட்டமாக அமைந்துள்ளது. எடப்பாடி அரசு ஊழலில் புரையோடிக்கிடக்கிறது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என பிற மாநிலத்தவர்களை நுழைக்கும் செயலை இந்த அரசு செய்துவருகிறது.
விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த அரசை வீழ்த்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று கடுமையாகச் சாடினார்.