நெல்லை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்றுடன் 19ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறும்போது, "டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த 19 நாள்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகளுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: விவசாய போராட்டத்தைவிட இவங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தரணும் - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர்