திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே திருமலை கொழுந்து புரம், மணக்காடு, மணப்படை வீடு ஆகிய கிராமங்களில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் (குட்டி யானை) 35 பேர், தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள சவரிமங்கலம் காட்டுப்பகுதியில் உளுந்தம் செடி பறிப்பதற்காக சென்றுள்ளனர்.
திருமலைகொழுந்து புரத்தை சேர்ந்த சித்திரை என்பவர் வாகனத்தை ஓட்டியுள்ளார். புதியம்புத்தூர் செல்லும் வழியில் வாஞ்சி மணியாச்சி காவல் நிலையம் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி ஈஸ்வரி (27) உட்பட சம்பவ இடத்திலேயே கோமதி (65), பேச்சியம்மாள் (54), மலை அழகு (48), பேச்சியம்மாள் (30) ஆகியோர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எம்எமல்ஏ
படுகாயமடைந்த 6 பேர் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையிலும், 24 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை ஒட்டபிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காயம்பட்டவர்களுக்கு உடனடியாக ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவியும், உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்
நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 24 பேரை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், தங்களுக்கு அரசிடம் உரிய நிதி பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:மணியாச்சி விபத்து: எஸ்பி ஆய்வு; சூடுபிடிக்கும் விசாரணை..