திருநெல்வேலி: பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியைச்சேர்ந்தவர், பால் ராபின்சன். இவர் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காலனி பகுதியில் அடிக்கடி சென்று வீட்டின் சுவர் ஏறிக்குதித்து பெண்கள் உடை மாற்றுவது, குளிப்பது உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். சமீபகாலமாக காலனி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் சந்தேகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் பால் ராபின்சன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவரை வீடியோ மற்றும் படம் எடுத்துள்ளார். எதிர்பாராதவிதமாக அதைக் கவனித்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டைச்சுற்றி குவிந்தனர். பின்னர், அவரைத் தேட ஆரம்பித்தனர். அப்போது சுவரேறி குதித்த பால் ராபின்சன் அருகிலுள்ள பூங்காவில் மறைந்துகொண்டார்.
இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் அவரைப் பிடித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பால் ராபின்சன் இதுபோன்று பல நாள்கள் பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தது தெரியவந்துள்ளது. அவரது செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீட்டுல என்ன இருக்கு? வேவு பார்க்கும் ஆசாமி...