திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் இருந்து வெள்ளூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரும், திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த வெள்ளூரைச் சேர்ந்த முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரில் பயணித்த மற்றொருவர் படுகாயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டியபோது காருக்குள் கீழே விழுந்த செல்போனை குனிந்து எடுப்பதற்கு முயற்சித்தபோது, கார் முருகனின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடைய உயிரிழந்த முருகன், திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கடந்த 2010ஆம் ஆண்டு ஆள்மாறாட்டத்தால் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெற்றிவேல் கூலிப்படையினரால் நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், சரமாரியாக அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது.
வெற்றிவேல் கொலை சம்பவத்தில், 4வது குற்றவாளியாக முருகனது பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்போது கொலை நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக அப்போதைய தமிழக அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் ஆட்சியர் உள்பட அதிகாரிகள் சென்றனர். எனவே, இந்த கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.