திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணியை நடத்தினர்.
அப்போது, காவல்துறையினர் தடியடி நடத்தி, அவர்களை விரட்டியடித்தபோது பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி தப்பிக்க முயன்றனர். இதில், 17 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலர் மரியாதை
இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தோர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, பழனி, ரூபி மனோகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக, ஒவ்வொரு அரசியல் கட்சிகள், அமைப்புகளில் இருந்து ஐந்து நபர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த வர வேண்டும் எனவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று பலரும் அஞ்சலி செலுத்தவரும் சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நினைவுச் சின்னம்
அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, “தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவுச் சின்னம், மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றால் திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பு - அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்