கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். .
இந்த சூழ்நிலையில் இன்று (மே 5) கோவிந்தராஜன் வழக்கம்போல் ஜெயிலுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கைதி கோவிந்தராஜன் திடீரென காணாமல் போயுள்ளார். இதை அறிந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சிறை காவலர்கள் குழுவாக பிரிந்து தப்பி ஓடிய கைதி கோவிந்தராஜனை தேடி வருகின்றனர் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக தேடிவருகின்றனர்.
பொதுவாக இது போன்று கைதிகள் மருத்துவமனைகளுக்கோ அல்லது நீதிமன்றங்களுக்கோ வெளியில் அழைத்துச் செல்லும்போது தப்பி ஓடுவது வழக்கம். ஆனால் சிறைக்குள் வேலை பார்த்துக்கொண்டு இருந்த கைதி தப்பி ஓடியதால் சிறையில் காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்து மனோ என்பவர் சக கைதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இதை கண்டித்து தற்போதுவரை முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சிறையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் சிறைத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.