நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படிப்பின் மூன்றாவது பருவத்துக்கான பாடப்புத்தகத்தில் இருந்து பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் த காம்ரேட்ஸ் என்ற புத்தகம் நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதாவது அந்தப் புத்தகத்தில் வட மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் அரசியல் பின்னணி குறித்தும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏபிவிபி அமைப்பினர் அளித்த புகாரில் ஒரே வாரத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து புத்தகத்தை நீக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த புத்தகம் சேர்க்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது ஆனால் இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த சூழலில் ஏபிவிபி அமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனோன்மணியம் சுந்தரனார் களத்தில் முதுகலை ஆங்கிலம் படித்து வந்துள்ளார்.
அப்போது மூன்றாவது செமஸ்டரில் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ என்ற அந்த புத்தகத்தை பற்றி அவர் அறிந்துள்ளார். அந்த புத்தகத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிப்பது போன்றும் இந்திய ராணுவத்தினர் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாக அறிந்துள்ளார். இதையடுத்து உடனடியாக தங்கள் அமைப்பின் உயர் மட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ஏபிவிபி அமைப்பின் மாநிலச் செயலாளர் விக்னேஷ் பரிந்துரையின் பேரில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஏபிவிபி அமைப்பின் நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாக விக்னேஷ் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு நிர்வாகிகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பிச்சுமணியை நேரில் சந்தித்து, அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தில் தேசத்துக்கு எதிராகவும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதால் மாணவர்கள் தவறான வரலாறை படித்து வருகின்றனர். எனவே அந்தப் புத்தகத்தை உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
மேலும் பாஜக சார்பிலும் உயர்மட்டத்தில் இருந்து துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்தால் வேறு வழியில்லாமல் பாடப்புத்தகத்தை நீக்க முடிவு செய்த துணைவேந்தர் நேற்று இதுதொடர்பாக பல்கலைகழக சிண்டிகேட் கூட்டத்தை கூட்டியுள்ளார். அப்போது பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் முன்னிலையில், முதுகலை ஆங்கிலம் மூன்றாவது செமஸ்டரில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகத்தை நீக்குவது என்று கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார். இதற்கிடையில் தங்கள் மனு மீது அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே வாரத்தில் புத்தகத்தை நீக்கியதற்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏபிவிபி அமைப்பு நிர்வாகிகள் துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அரசு சாராத ஒரு அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை நீக்கிய கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் பிச்சுமணியை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த புத்தகம் ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரால் மாற்றப்படும். இந்த சூழலில் மாணவர் அமைப்பினர் எங்களிடம் அருந்ததிராய் புத்தகம் குறித்து புகார் கொடுத்தனர். ஏற்கனவே சிலர் இந்த புத்தகத்தை மறைமுகமாக எதிர்த்தனர். அதன் காரணமாகவே புத்தகம் நீக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏபிவிபி அமைப்பு அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டதாக இந்த விவகாரத்தில் அரசியலாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், மனோன்மணியம் பல்கலை கழகத்தின் இந்த செயல் இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் தொ. பரமசிவன் கருத்து தெரிவித்துள்ளார். எழுத்தாளர் தொ. பரமசிவன் தற்போது உடல் நலம் குன்றி கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி உள்ளார். இதனால் சரிவர பேச முடியாது. அவர் நம்மிடம் இந்த விவகாரம் குறித்து சில விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் த காம்ரேட்ஸ் புத்தகத்தை நான் படித்துள்ளேன். ஆதிவாசிகள் குறித்து நேரடியாக களத்தில் சென்று மிகவும் கஷ்டப்பட்டு இந்த புத்தகத்தை அவர் எழுதினார். குறிப்பாக காட்டுப்பகுதியில் ஆதிவாசிகள் தினம் தினம் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்தும் அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறை குறித்தும் நேரடியாக களத்தில் ஆய்வு செய்து புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஆதிவாசிகள் பிளாஸ்டிக் கவர்களில் தான் மலம் கழிக்க வேண்டும். அது போன்ற பல்வேறு இன்னல்களை அவர் புத்தகத்தில் எழுதியிருப்பார். இந்த சூழ்நிலையில் இந்த புத்தகத்தை நீக்கியிருப்பது இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதுகிறேன் என்று தெரிவித்தார். புத்தகம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் இன்று நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.