திருநெல்வேலி: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். பின் நெல்லை, வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிய கருத்து பாஜகவை அலற விட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் சொல்லிய கருத்தைத்தான் உதயநிதி ஸ்டாலினும் கூறியுள்ளார். ஆனால் இதை பாஜகவினர், இந்து மதத்திற்கு எதிராக கருத்து கூறியதாக திரித்து கூறி வருகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்து மதத்தின் மீது அதிக பற்று கொண்ட ராமானுஜர் சனாதனத்திற்கு எதிரான கருத்தை சொல்லி உள்ளார். தீண்டாமைக்கு எதிராக செயல்பட்டு புரட்சி செய்தவர் ராமானுஜர். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் சனாதன எதிர்ப்பு. இதற்கு பாரதி ஜனதா கட்சி அச்சப்பட, அலறி அடிக்க தேவையில்லை. இதுபோல, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மதம் என்னும் பேய் பிடிக்காது இருக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.
பகுத்தறிவு வரவேண்டும் என சொல்வது தவறானது இல்லை. மகாத்மா காந்தி தீண்டாமைக்கு எதிராக போராடியுள்ளார். சுவாமி விவேகானந்தர் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென கூறியுள்ளார். இதையெல்லாம் சனாதனத்திற்கு எதிர்ப்பாக கூற முடியாது. சமூகத்தில் மாற்றம் வேண்டும், பிற்போக்கு எண்ணங்கள் அகல வேண்டும் என்பதுதான்.
மொழி, இனம், ஜாதி, மதம் ஆகியவற்றை சொல்லி அதனை தூண்டி, பாரதிய ஜனதா கட்சி வாக்கு வங்கியை பெற சனாதனத்தை பெரிதாக்கி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில், எந்த ஒரு தவறும் இல்லை. சனாதனத்தை சீர்திருத்த வேண்டும், பகுத்தறிவு வேண்டும் என்று கூறுவது இந்துக்கு எதிர்ப்பானதல்ல.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வரும் சர்வாதிகார போக்காகும். நம் நாடு பல மொழி, கலாசாரம், பண்பாடு என பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கு நாடு தழுவிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.
யாரையும் கேட்காமல் அதிபர் முறையை ஹிட்லர், முசோலினி போல் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். பாரதிய ஜனதா ஊழலற்ற ஆட்சி செய்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடந்த ஊழலை சிஏஜி அறிக்கை தெளிவாக விளக்கியுள்ளது.
எனவே இவர்களுக்கு மற்றவர்களை பத்தி பேச அருகதை இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்ற நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.