திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் இஞ்சிக்குழி, பெரிய மைலார், சின்ன மைலார், சேர்வலாறு, அகத்தியர் காலனி ஆகிய ஐந்து இடங்களில் காணி பழங்குடி மக்கள் நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் இஞ்சிக்குழி மற்றும் பெரிய மைலார் என்பது அடர்ந்த காட்டுப்பகுதி ஆகும். இங்குச் செல்ல வேண்டும் என்றால் பாபநாசம் கோயிலைக் கடந்து சுமார் பத்து கிமீ தூரம் மலை பயணம் மேற்கொண்டு அங்கு சுமார் 4 கிமீ தூரமுள்ள காரையாறு அணையைக் கடந்து அதன் பிறகு சுமார் 10 கிமீ தூரம் நடந்து தான் இஞ்சிக்குழியை அடைய முடியும். அதேபோல் அணையைக் கடந்து சுமார் 6 கிமீ தூரம் நடந்து தான் பெரிய மைலாரை அடைய முடியும்.
தற்போதைய புள்ளி விவரப்படி மேற்கண்ட ஐந்து இடங்களில் 158 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 காணி பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். தேன் எடுப்பது, மரவள்ளிக் கிழங்கு விளைவிப்பது, மிளகு, வாழை போன்ற விவசாயம் செய்து அவற்றைக் கூட்டுறவுச் சங்கங்களில் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். இதுவே இவர்களது பிரதான தொழிலாகவும் உள்ளது.
இந்த நிலையில் பெரிய மைலார் காணி குடியிருப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக விவசாயம் செய்து திறமைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வருகிறார். பெரிய மைலாரில் உள்ள 9 குடும்பத்தினரில் பாண்டியம்மாள் விக்ரம் தம்பதியின் இரண்டாவது மகன் முருகேசன் என்ற மூக்கன் இவருக்கு ஒன்றரை வயது இருக்கும் போது கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது இவரது இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டு கண் பார்வை பறிபோனது. தனது ஆசை மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் எந்த ஒரு தொலைத்தொடர்பு வசதியும் இல்லாத நடுக்காட்டில் பாண்டியம்மாள் பரிதவித்துள்ளார். இதனிடையே பாண்டியம்மாளின் கணவர் குடும்பத்தைப் பிரிந்து வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். மனதைத் திடப்படுத்திக் கொண்ட பாண்டியம்மாள் தனி ஆளாக மேடு, பள்ளம், பாறைகள் குன்றுகள் என சவால்கள் நிறைந்த நடுக்காட்டில் பார்வையற்ற தனது மகனுக்குக் கைப்பிடித்து நடப்பதற்கும் கற்றுக் கொடுத்து தன்னம்பிக்கையையும் ஊட்டியுள்ளார்.
அதன் விளைவாக 15 வயதிற்குப் பிறகு தனது தாய்க்குத் துணையாகக் காட்டில் விவசாயம் பார்க்க விரும்பிய முருகேசன் ஆரம்பத்தில் தனது தாயின் உதவியோடு விவசாயத்தை கற்றுக் கொண்டார். தற்போது 38 வயதான முருகேசன் தனி ஆளாக சுமார் அரை ஏக்கர் நிலத்தில் அதிகளவு மரவள்ளிக் கிழங்கு, மிளகு, வாழை போன்ற பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவர் கண் பார்வை இல்லாவிட்டாலும் தன் அசாத்திய திறமை மூலம் கையில் மண் வெட்டி பிடித்துக் களை வெட்டுவதில் தொடங்கி பயிர்களைப் பராமரிப்பது, விளைந்த பயிர்களை அறுவடை செய்வது, அறுவடைக்குப்பின் அதை விற்பனைக்கு அனுப்புவது என அத்தனை வேலைகளையும் தானே செய்கிறார்.
யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றி, மிளா, காட்டு மாடுகள், கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கக் கம்பு மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளார். மேலும் தகர டப்பா ஒன்றை கட்டி அதில் தான் இருக்கும் இடம் வரை கயிறு கட்டி அதன் மூலம் டப்பாவில் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டுகிறார்.
இதுபோன்று கடும் சவால்கள் இருந்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் கடைசி வரை விவசாயம் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே தனது லட்சியம் எனவும் விவசாயத்துக்காக அரசின் கடனுதவியை ஒருபோதும் நாடுவதில்லை என்றும் முருகேசன் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
இதையும் படிங்க: போடியின் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!